முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நவம்பர் மாதம் இந்த ஆண்டும் மரநடுகை மாதமாக வடமாகாண சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1371

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் நாள் தொடங்கி முப்பதாம் நாள் வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் .ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது எனவும், எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத் தரும் மாதம் கார்த்திகையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
tree-2

மழைநீரால் மாத்திரம் அன்றி, தமிழ் மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளதுடன், மண்மீட்புக்காகப் போராடி உயிர்துறந்த எமது உறவுகள் அனைவரையும் நினைத்துக் கூட்டாகக் கண்ணீர் உகுக்கும் நாட்களும் இம்மாதத்துக்குள்ளேயே அடங்குகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
trees

மரங்களே எமது ஆதித் தெய்வங்கள் எனவும், மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டு முறையைக்கொண்ட நாம், மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நட்டுப் போற்றும் மாண்பையும் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவூட்டியுள்ள அவர், இவற்றின் அடிப்படையிலேயே கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

“ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்பதை மகுட வாசகமாகக் கொண்ட மரநடுகை மாதத்தின் நடப்பு ஆண்டுக்குரிய கருப்பொருள் “சொந்த மண் சொந்த மரங்கள்” என்பதாகும் எனவும் அவர் விபரித்துள்ளார்.

எமது சொந்த மண்ணில் எம்மோடு சேர்ந்தே பரிணாமித்து வளர்ந்த சொந்த மரங்கள் ஏராளம் உள்ளதுடன், எமது மண்ணின் செழுமையை இற்றைவரை தக்க வைத்திருப்பவை இந்த உள்ளூர் மரங்கள்தான எனவும் தெரிவித்துள்ள அவர், அந்த வகையில் உயிர்ச்செழிப்பின் உயிர் நாடியாக விளங்கும் உள்ளூர் மரங்களுக்கு இந்த ஆண்டு மரநடுகை மாதத்தின்போது கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடுகை செய்வதோடு தொடர்ச்சியாகப் பராமரிப்போம் என்ற உறுதிமொழியுடன், தமது சுற்றாடல் அமைச்சை அணுகும் எவருக்கும் தம்மால் இயன்ற அளவுக்கு மரக்கன்றுகளை வழங்குவதற்கு சித்தமாயுள்ளதாகவும், எமது மண்ணின் பசுமைமையும் எமது வருங்காலத் தலைமுறையின் வளமான வாழ்வையும் பாதுகாக்கும் இந்தப் புனிதமான கைங்கரியத்தில் பாடசாலைகள், கூட்டுறவு அமைப்புகள், சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள், வணக்கத்தலங்கள் ஆகியவற்றோடு, பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *