முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

புதிய அரசியலமைப்பு ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்காது

1285

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு வரைவில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை என்றும், அது எந்தவகையிலும் நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல எனவும் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதிலும், அதில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புத்த சாசனத்துக்கு பாதிப்பான எந்தவொரு அம்சமும் கிடையாது என்பதுடன், அத்தகையதொரு நடவடிக்கைக்கு தனது பதவிக் காலத்தில் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன, அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட சிறீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்குத் தாம் தயாராக இல்லை எனவும், புதிய அரசியலமைப்பு ஒருபோதும் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஓர் ஆவணமாகவன்றி, மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கருத்திற் கொண்டே தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மல்வத்தை விகாரைக்கும் சென்ற மைத்திரிபால சிறிசேன, மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே சிறீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து அனைத்து மக்களையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டம் குறித்து மல்வத்தை மகாநாயக்க தேரருக்கு விளக்கியதுடன், கடந்த இரண்டு ஆண்டு காலமாக தற்போதைய அரசாங்கம் பின்பற்றி வந்த நட்பு ரீதியான வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் பல்வேறு உலக நாடுகளின் உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இதேவேளை தம்மை சந்தித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துக்குள் இரண்டு நிலைப்பாடுகளை கொண்ட குழுக்கள் இருக்கின்றபோதிலும், நல்லாட்சி அரசாங்கம் ஐந்தாண்டு காலத்துக்கு நீடிக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் தமக்கிடையில் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளமுடியும் என்றும், உள்ளுராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவின் பதவி விலகல் விடயத்தை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மகிந்த தரப்புடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்கப்போகிறார்கள் என்ற செய்தி வெளியான நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *