முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மகாவலித்திட்டம் என்ற பெயரில் நன்கு திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரமடைந்துள்ளதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

648

இலங்கையில் தங்களுடைய பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இன மக்களால் கபளீகரம் செய்யப்படுவதனை எமது தமிழ் மக்கள் அச்சத்துடனேயே நோக்கி வந்துள்ளார்கள் என்பதையும், தமது இருப்பைத் தொடர்ந்தும் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் தமிழ் மக்கள் மனதிலே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளது என்பதையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முல்லைத்தீவில் நடைபெறுகின்ற மக்கள் போராட்டத்தை ஆதரித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்ஓயா திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இனப்பரம்பல் மாற்றியமையக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் முதலில் அச்சத்தை உதயமாக்கியது எனவும், அதன் பின் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் தற்போது வடமாகாணத்திலும் நடைபெறும் அபகரிப்புக்கள் அச்சத்தை உச்சமாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையிலேதான் தமிழ் அரசியல் தலைவர்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்ற பெரும்பான்மையின குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றார்கள் எனவும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகளில் மொழி உரிமையுடன் அச்சமின்றி வாழக்கூடிய தமது இருப்புக்களை உறுதிப்படுத்தி கொள்வது எமது முக்கியமான அரசியற் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

1957ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்திலும், 1965ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தின் போதும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்ற பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதனைத் தவிர்ப்பதற்கு வரைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ளும்போது, இலங்கையின் மொத்தக் குடிப்பரம்பலில் 12சதவீதத்தை மட்டும் தமதாக்கிக் கொண்டுள்ள தமிழ் பேசும் மக்கள், அவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஏனைய மொழி பேசுகின்ற மக்களைக் குடியேற்றுவதன் மூலம், தமிழ் மக்களின் உரிமைகள் அவர்கள் வாழுகின்ற பிரதேசத்திலேயே இல்லாமல் ஆக்கப்படுகின்றன எனவும் அவர் விபரித்துள்ளார்.

இன்று இலங்கையில் காடுகளில் வசிக்கும் பறவை இனங்களுக்கும், மிருகங்களுக்கும் தனித்தனியாக சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வாழும் முறைமைகள் குழப்பமடையாத விதத்தில், அவை தமது இயல்பான முறையிலேயே வாழ்வதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்ப் பேசும் மக்களின் இருப்பை உறுதி செய்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டு, அவர்களை ஐக்கிய இலங்கைக்குள் சுயமாக வாழும் ஒரு பிரிவினராக ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாதது விந்தைக்குரியது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அதற்கு மாறாக தமிழ் மக்களின் பூர்வீகப் பகுதிகளைப் பறித்தெடுப்பதற்கே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முயன்றுள்ளன எனவும், வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் பாரம்பரியமாக இருக்கின்ற தமிழ் மக்களின் உறவைத் துண்டித்து, வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்தாழும் தந்திரத்தின் உத்தியாகவே இவ்வாறான குடியேற்றங்களை அரசு மேற்கொள்கின்றது என்று நாங்கள் கருதுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது மாகாணசபையின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும் என்று அரசியல் அமைப்புத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், தமக்குத் தெரியாத வகையிலேயே குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது கண்டிக்கப்படக் கூடியதும் அனுமதிக்க முடியாததுமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐனநாயக விரோத இனப்பரம்பலின் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையையும், தமிழ்ப் பகுதிகளில் நூறு வீதம் சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்குவதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும், அதற்காக முல்லைத்தீவில் நடைபெறுகின்ற மக்கள் போராட்டத்தை நாங்கள் முற்றிலும் ஆதரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மகாவலி நீர் எமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியும், மகாவலி அதிகாரசபையின் செயற்பாட்டை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பது பற்றியும் எமது மக்கள் வருங்காலத்தில் தீர்மானிப்பார்கள் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *