முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்

626

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு மகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், முன்னாள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைநிலை அடுத்த ஆண்டு ஒரு ராஜபக்சவின் தலைமையில் தெரிவு செய்யப்படக்கூடிய அரசாங்கமொன்றுக்கு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அளிக்கக்கூடிய எதிர்கால ஆதரவுக்கு தங்களது தற்போதைய செயற்பாடுகள் கொண்டு வரக்கூடிய விளைவுகள் குறித்து மகிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் சிந்தித்துப் பார்ப்பதற்கான முக்கியமான சந்தர்ப்பமொன்றை வழங்கியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைமை அமைச்சர் ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் அரசாங்க அமைச்சுக்களுக்கு நிதியை நிறுத்துவதற்கான வேறு இரண்டு தீர்மானங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும், பதவியில் இருந்து இறங்க அவர் மறுத்திருக்கிறார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரின் இந்த மறுப்பு இலங்கையின் அரசியலமைப்பு மீது அவருக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இருக்கக்கூடிய பற்றுதலைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமன்றி, தங்களதும் கட்சியினதும் எதிர்காலத்துக்கு அநாவசியமான சேதத்தை ஏன் அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்ற கேள்வியையும் கிளப்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சித் தேர்தல்களில் பெற்ற பெருவெற்றி, இலங்கையில் அவர் தொடர்ந்தும் பெரும் செல்வாக்குடன் விளங்குகிறார் என்பதை தெளிவாக வெளிக்காட்டியது எனவும், அடுத்த ஆண்டு அரச தலைவர் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படக்கூடும் என்ற நிலையில், அதில் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்பு மகிந்த ராஜபக்சவை தடுக்கிறது என்ற போதிலும் அவரது சகோதரர் பலம்பொருந்திய ஒரு வேட்பாளராக நிற்கக்கூடும் என்றும் றொபேர்ட் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அடுத்த சனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதை நோக்கி, தனக்கிருக்கக்கூடிய கணிசமான அரசியல் ஆற்றலைப் பயன்படுத்துவதே விவேகமான செயலாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அவ்வாறு அவர் செய்வாரேயானால், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் புதிய அரசியல் மற்றும் இராஜதந்திர மோதல் விரிவடைகின்ற நிலையில் இலங்கையை வாய்ப்பான ஒரு அந்தஸ்தில் வைக்கவும் உதவமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *