முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி

236

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பியதுடன், அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போது, சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம், வாய் மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர்.

இதன்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் எமது கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இள நீல சீருடை அணிபவர்களையெல்லாம் குற்றவாளிகளாக காட்டவே நீங்கள் முற்படுகின்றீர்கள். மணிவண்ணனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாதளவுக்கு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது. தமக்கு பிடிக்காதவர்கள் ,எதிரானவர்கள் அடக்கப்படுகின்றனர். எனவே அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ் மாநகர சபை முதல்வர் அமைத்த காவல் படையின் சீருடை கொழும்பு மாநகரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைக்கு ஒப்பானது என்று தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகம் பேணப்பட வேண்டுமானால் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் இது போன்ற நடவடிக்கைகளினால் நாடு பாரதூரமான விளைவுகளை நோக்கியே நகரும் என்றும் என்றும் கூறினார்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சாணக்கியன், கொழும்பு மாநகர சபையில் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் யாழ் மாநகர சபையிலும் பின்பற்றியுள்ளார்கள்.ஆனால் கொழும்பில் நன்றாகவுள்ளது, யாழ்ப்பாணத்தில் கெட்டதாகப் பார்க்கப்படுகின்றது என குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும் தனது உரையில் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்து கண்டனத்தினை வெளியிட்டதோடு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதானது மோசமான இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது என நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஐ. நா மனித உரிமைகள் பேரவை மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *