முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது

532

மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்தல வானூர்தி நிலையத்தை இலங்கை வானூர்திகளைப் பயிற்றுவிக்கும் தளமாகப் பயன்படுத்துவதே காலோசிதமான செயற்பாடாக அமையும் எனவும், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் என்பன நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் அம்சங்களாகவே காணப்படுவதனால், அவற்றின் மீது பிறநாடுகள் தலையீடுகளைச் செய்வதற்கு இடமளிக்ககூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா, பலவந்தமாகத் தலையீடு செய்தமைக்கான வரலாறுகள் உள்ளதை அறிந்திருந்தும், மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், அவ்வாறு இடம்பெறுமாயின், அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையமும் தனியார் மயப்படுத்தப்படவுள்ளது எனவும், அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன என்றும், ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிவில் வானூர்தி போக்குரத்துச் சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், குறித்த சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் போது மக்கள் விடுதலை முன்னணி கடுமையான எதிர்ப்பை வெளியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்தல வானூர்தி நிலையம் நட்டமீட்டுவதை அறிந்தும் இந்தியா அதனை பெற்றுக்கொள்கின்ற நிலையில், இதனை இந்தியாவின் அக்கறை என்று கருதமுடியாது எனவும், மாறாக அது இந்தியாவின் தூரநோக்கு திட்டம் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வானூர்தி நிலையத்தை அண்மித்த நிலப்பரப்பிலேயே சீனா பொருளாதார வலயங்களை உருவாக்குகின்றது எனவும், அவை இலாபமீட்டும் வகையில் மாற்றியமைக்கப்படும் போது, மத்தல வானூர்தி நிலையத்தை கொண்டு, இந்தியா பெருமளவில் இலாபமீட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *