11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

371

கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெற்றியாராச்சி முதியான்சலாகே சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி என்ற முழுப் பெயரைக் கொண்ட நேவி சம்பத், கொழும்பு லோட்டஸ் வீதியில் போலி அடையாள அட்டையுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

2008-09 காலப்பகுதியில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேவி சம்பத் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 41 வயதுடைய இவர், சிறிலங்கா கடற்படையில் லெப்டினன்ட் கொமாண்டர தர அதிகாரியாக பணியாற்றியவர் என்பதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் இவரைக் கைது செய்வதற்கு உதவுமாறு காவல்துறையினர் நேவி சம்பத்தின் படத்தை பலமுறை வெளியிட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட நேவி சம்பத்தை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாளையநாள் வரை அவரை தடுத்து வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *