2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல்கள் ஊடுருவல் செய்யப்பட்டதாக 12 ரஷ்ய உளவு பிரிவினர் மீது அமெரிக்க சட்டமா அதிபர் ரோட் ரோசன்ஸ்டெயின் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனுக்காக பரப்புரை செய்த அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஊழியர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் இணைய தாக்குதல்களைத் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சதித்திட்டம் நடைபெற்றபோது அவர்கள் பல அமெரிக்கர்களை தொடர்பு கொண்டதாக கூறிய அமெரிக்க சட்டமா அதிபர் ரோட் ரோஸன்ஸ்டெயின், ஆனால் எந்த அமெரிக்க குடிமக்கள் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்று கூறியுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறைக்கு இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரகசியமாக கணினிகளை கண்காணித்ததுடன், தீங்கிழைக்கும் குறியீடு கொண்ட நூற்றுக்கணக்கான கோப்புகளை கணினிக்குள் செலுத்தி, மின்னஞ்சல்கள் மற்றும் பிற ஆவணங்களை திருடினார்கள் என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்கனவே விசாரித்து வரும் ரொபர்ட் முல்லர், அந்த விசாரணையில் 20 நபர்களின் மீதும், மூன்று நிறுவனங்களின் மீதும் ஏற்கனவே குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.