முக்கிய செய்திகள்

144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு

65
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 24-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெறுவதில் தடை விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
எனவே மக்களின் நடவடிக்கைகள் முடங்கின. ஊரடங்கு உத்தரவினால் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் வீட் டில் இருந்தபடி அலுவலகப் பணியாற்றி வருகின்றனர்.
ஆனாலும் ஊரடங்கு உத்தரவை மீறி மிகச் சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து அங்கும் இங்கும் செல்லத் தொடங்கினர். சென்னையில் முதல் நாளில் போக்குவரத்து போலீஸ் ஒருவர் கையெடுத்து வணங்கியும், கண் கலங்கியும் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்று சாலையில் பயணித்தவர்களைக் கேட்டுக் கொண்டார்.
கட்டுப்பாட்டில் இருந்து விலகி வீட்டை வெளியே தேவையில்லாமல் வருகிறவர் களைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில இடங்களில் தோப்புக்கரணம் போடச் செய்வது உள்ளிட்ட நூதன தண்டனைகளையும் போலீசார் விதிக்கின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் கொரோனா நிவாரண உதவிகளையும், இலவச ரேஷன் பொருட்களையும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மளிகைக் கடைகளை எந்த நேரத்திலும் திறக்கலாம் என்றும் கூட்டமாக கூடாமல் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. காய்கறி உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே 4-ம் நாளான நேற்று காலையில் ஆங்காங்கு மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. சில இடங்களில் மக்கள் கூடுவதாக புகார்களும் எழுந்தன. இந்தப் புகாரினால் வேலூரில் ஒரு காய்கறி சந்தையை வேலூர் மாநகராட்சி உடனே மூடியது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் ஊரடங்கு நிலை பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி 27-ந் தேதி (நேற்று) முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணிகள் குறித்தும், இது தொடர்பாக பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டார்.
அதற்கு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் பிரதமர், மக்கள் நலன் கருதி, 144 தடையுத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேற்கூறிய அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பிரதமரிடம் முதல்- அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *