முக்கிய செய்திகள்

கைதாகும் நிலையில் வலி.கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர்

149

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை, கைது செய்வதற்கான நடவடிக்கைகளில், கோப்பாய் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு, கோப்பாய் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, வலி கிழக்கு பிரதேசசபைக்குச் சென்றுள்ள போதும், தவிசாளர் தனது செயலகத்திலோ, வீட்டிலோ இல்லாததால், அவரைக் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வலி.கிழக்கு தவிசாளரை நிரோசைக் கைது செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், 14 நாட்கள் பிணை இல்லாமல் அவரைத் தடுத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபையின் அனுமதியின்றி, பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் நாட்டியிருந்த அறிவிப்புப் பலகையை, பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியிருந்தார்.

இதுகுறித்து அவரிடம் இரண்டு நாட்கள் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் சிறிலங்கா காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

எனினும், கைது நடவடிக்கையை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் தவிசாளர் நிரோஷ் இறங்கியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *