முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில்

138

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று சிறிலங்கா மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தினை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு அதிலிருந்து வெளியேறுவதாகவும் பகிரங்கமாக கடந்த மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அறிவித்து விட்டது. 

இதன் காரணமாக, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட 30/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அத்தீர்மானத்தினையே மீளவும் முன்னெடுப்பதற்காக (Rollover) 34/1, 40/1 தீர்மானங்கள் தலா இரண்டு வருட கால இடைவெளில் நிறைவேற்றப்பட்டிருந்தன. 

எனினும் சிறிலங்கா அரசாங்கம் 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அதே தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை அதாவது அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவருவதால் பயனில்லை என்றும் அமெரிக்க தூதுவரர் அலைனா டெப்லிஸ்  கூறியுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவர் அலைனா டெப்லிஸ், அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி அடம் சுமித் ஆகியோருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்றிருந்தது. 

இதன்போதே மேற்கண்ட விடயங்களை அமெரிக்க தூதுவர் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *