2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தாம் நம்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்

521

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தாம் நம்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஹெல்சிங்கி (Helsinki) நகரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை அடுத்து, ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில் அவர் அந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்தது என்று கூறும் தமது சொந்தப் புலனாய்வு அமைப்பை நம்புகிறாரா அல்லது ரஷ்ய அதிபரை நம்புகிறாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ரஷ்யா தலையிடவில்லை புட்டின் தெரிவித்துள்ளார் என்றும், அவர்கள் தலையிடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை எனவும் அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர் அமெரிக்காவின் சனநாயக அடிப்படையிலான தேர்தல் முறைகளில் ரஷ்யா தலையிட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

பல காலமாக கீழ்மட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ரஷ்ய – அமெரிக்க உறவு அந்த சந்திப்பின் மூலம், புதிய உச்சத்தை எட்டியிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும், ரஷ்ய அதிபர் விளமிர் புட்டினுக்கும் இடையில் மூடிய அறையில் இரண்டு மணி நேரம் பேச்சு நடாத்தியதாக தெரிவிக்க்பபடுகிறது.

இரண்டு நாட்டுத் தலைவர்களும், சிரியா, பயங்கரவாதம், அணுவாயுதக் களைவு முதலான அம்சங்கள் பற்றிக் கலந்து பேசியதாகவும், அதன் போதே 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியும் அவர்கள் கருத்துப் பரிமாறிக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை தங்கள் சொந்தப் புலனாய்வு அமைப்பை மறுத்து, ரஷ்யாவை ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு உடனடியாக அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பவுல் ரய்யான், ரஷ்யா கூட்டாளி நாடல்ல என்பதை டிரம்ப் உணரவேண்டும் என்று கூறியுள்ளார் .

கடுமையான மொழியில் வெளியான அவரது அறிக்கையில், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அறம் சார்ந்து பொதுவான வி்யங்கள் இல்லை என்றும், அமெரிக்காவின் அடிப்படையான விழுமியங்களுக்கும், கொள்கைகளுக்கும் ரஷ்யா எதிராகவே உள்ளது எனவும் கூறியுள்ளதுடன், 2016 தேர்தலில் ரஷ்யா அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதா என்ற சந்தேகத்துக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த செனட்டர் ஜான் மெக்கைன் இது பற்றிக் கூறும்போது, அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரின் வெட்கக்கேடான செயல்பாடு இது என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இருந்த எந்த அமெரிக்க அதிபரும் எதிராளியிடம் தம்மை இந்த அளவு மோசமாக தாழ்த்திக்கொண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *