போர்த்துக்கல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்விலும் முன்னிலை பெற்றுள்ளார்.
ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூனின் பதவி இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது.
அடுத்த ஐ.நா., பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க ஐ.நா., வரலாற்றில் முதன் முறையாக விவாதம், நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
போர்த்துக்கல் முன்னாள் பிரதமரும், ஐ.நா., அகதிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
கடந்த மூன்று சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர், 4வது சுற்றிலும் அதிக வாக்குகளைப் பெற்றார்.
15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா., பாதுகாப்புக் குழுவில் 4ம் சுற்று தேர்வில், குட்டெரசுக்கு ஆதரவாக 12 நாடுகளும், எதிராக 2 நாடுகளும் வாக்களித்துள்ளன.
ஒரு நாடு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.