மலையாள நடிகை சாய்பல்லவியை அனைவருக்கும் சாய் பல்லவி என்பதைவிட மலர் டீச்சர் என்றுதான் தெரியவரும். அந்த அளவுக்கு ‘பிரேமம்’ படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர்.
தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, எப்போது தமிழில் நடிப்பார் என்பது அனைவரின் ஆவலாக இருக்கிறது.
அனைவருக்கும் பிடித்துப்போன சாய்பல்லவி, தனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, சாய் பல்லவி நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாம். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ? இல்லையோ? அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்து ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று அவர் விரும்புவதாக கூறியுள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு கதாநாயகி தேடுதல் நடைபெற்று வருகிறது. சாய் பல்லவி கூறுவதை வைத்து பார்க்கும்போது, அநேகமாக சூர்யா படத்தில் அவரை ஜோடியாக நடிக்க வைக்க படக்குழுவினர் அணுகலாம் என்று தோன்றுகிறது.
அதுமட்டுமில்லாமல், சாய் பல்லவிக்கு மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படம் மிகவும் பிடித்த படமாம். மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நாயகியாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டது சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.