விமான பயணத்தின் போது காக்பிட் பகுதியில் விமானிகள் செல்ஃபி எடுத்துக் கொள்ள மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்துள்ளது.
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானிகள் செஃல்பி எடுப்பது பாதுகாப்பை பாதிக்கும். இதனால் பாதுகாப்பு நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானிகள், விமான பயணத்தின் போது செல்ஃபிக்கள் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் சில விமானிகளை அழைத்து விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்டித்துள்ளது.
இந்த நிலையிலே விமான பயணத்தின் போது விமானிகள் செல்ஃபி எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விமானிகள் செல்ஃபி எடுக்கும் செயல்களை தொடர்ந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.