அருணாசலப்பிரதேச முதல்வர் பீமா காண்டு உட்பட, 43 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாசலப்பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால், அங்கு நிலவிவந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்குவந்துள்ளது.
அருணாசலப்பிரதேசத்தின் அரசியல் காட்சிகள் பலரையும் திகைக்க வைப்பதாய்த் திகழ்கின்றன. இந்த ஓராண்டில் ஏகப்பட்ட திருப்பங்கள், நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸ் என க்ரைம் எழுத்தாளர்களையே பின்னுக்குத் தள்ளுவதாய் இருக்கிறது அருணாசலப் பிரதேச அரசியல்.
அருணாசலப் பிரதேச சட்டசபை 60 இடங்களைக் கொண்டது. இதில் 45 இடங்களை தேர்தலில்வென்று காங்கிரஸ் ஆட்சி நடத்திவந்தது. முதல்வராக நபம் துகி ஆட்சி நடத்திவந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் கொடியுயர்த்தினர்.
இந்நிலையில் அம்மாநில அரசியலில் குழப்பம் நிலவியது. இதனால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டு இவ்வருடம் ஜனவரி மாதம் 26-ஆம் நாள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இடையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 11 பேரின் ஆதரவைத் திரட்டினர். கலிகோபுல் என்பவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டது.
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதையும், பின் விலக்கிக்கொள்ளப்பட்டதையும் எதிர்த்து நபம் துகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நபம் துகிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் முதல்வரானார். இந்நிலையில் ஜூலை 16-க்குள் அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாநில பொறுப்பு கவர்னரான ததகத்த ராய் உத்தரவிட்டார்.
நபம் துகிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு நிலவியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே அவர் பதவி விலகினார். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினர்.
மறைந்த அருணாசலப் பிரதேச முதல்வர் டோஜி காண்டுவின் மகன் பிமா காண்டுவைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவையும் பெற்று வெற்றிபெற்றார் பிமா காண்டு. இந்நிலையில் குறுகிய காலத்துக்கு முதல்வராகப் பதவி வகித்த கலிஃகோ புல், எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்துகொள்ள அம்மாநில அரசியலில் புயல் கிளம்பியது.
இப்போது முதல்வரான பிமா காண்டுவே பெரும்பாலான உறுப்பினர்களுடன் காங்கிரஸைக் கலைத்துவிட்டு, அருணாசலபிரதேச மக்கள் கட்சியில் இணைத்ததால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக எஞ்சியிருப்பவர் ஒருவரே. அவர் முன்னாள் முதல்வரான நபம் துகி மட்டுமே.