உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர் ஒருவர் நேற்று நாடு திரும்பியுள்ளார்.
கார்ரட்(Garratt) எனப்படும் அந்த நபர் கடந்த 2014ஆம் ஆண்டு, சீனாவின் வட கொரியாவுடனான எல்லைப் பகுதியில் வைத்து சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அந்த பகுதியில் 2008ஆம் ஆண்டிலிருந்து சிற்றூண்டிச் சாலை ஒன்றினை நடாத்தி வந்த நிலையிலேயே, அவரையும், யூலியா எனப்படும் அவரது மனைவியையும் சீன அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரது மனைவியான யூலியா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விடுவிக்கப்பட்ட போதிலும், சீனாவின் இரகசியங்களைத் திருடியதாகவும், கனேடிய புலனாய்வுத் துறைக்காக உளவுப் பணிகளில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட அவர், தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் எந்தவகையிலும் எந்தவொரு உளவு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கவிலலை என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்திவந்த நிலையில், அவரை விடுவிப்பதற்கான அனுமதியினை சீன நீதிமன்றம் வழங்கியதை அடுத்து, நேற்று அவர் தாயகம் திரும்பியுள்ளார்.
இதேவேளை பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது ஒரு வாரகால சீனப் பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பி ஒருவார காலத்தில், இவரது விடுதலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் சீனப் பயணத்தின் போது அவருடன் இணைந்து ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட சீனப் பிரதமர் லீ கெக்கியாங், தம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர் மனிதாபிமானத்துடனேயே நடத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் இந்த விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கார்ரட்டின்(Garratt) வழக்கறிஞர், அவரது விடுதலைக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்த கனேடிய அரசாங்கத்திற்கு, விடுதலையானவரின் குடும்பத்தார் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று வியாழக்கிழமை வன்கூவர் அனைத்துலக விமானநிலையத்தில் அவரை வரவேற்ற அவரது குடும்பத்தினர், அவரது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், நீண்ட இன்னல்களுக்கு பின்னர் நாடு திரும்பியுள்ள அவர் வழமைநிலைக்கு திரும்பும்வரை அவரின் அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.