கிளிநொச்சி பளை காவல்நிலையப் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை காலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சிற்றூர்தி ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகமயை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்ததாகவும் கூறப்படுகிறது.
சிற்றூர்தியில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன், காயமடைந்த மேலும் ஆறுபேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெல்லியடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 78 வயதான பசுபதி,75 வயதான பொன்னம்மா ,43 வயதான நந்தமூர்த்தி ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55 வயது மதிக்கத்தக்க ஒருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.