சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி வியாழனன்று இடம்பெற்றது. பேரணியின்போது மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் எனும் 23 அகவையுடைய இளைஞர் தீக்குளித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விக்னேஷ் உடலை அவரது குடும்பத்தினர் இன்று பெற்றுக்கொண்டனர். அதன்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் உடனிருந்தார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சிப் பணிமனையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விக்னேஷ் உடல் வைக்கப்பட்டு, இரவு மன்னார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சனிக்கிழமை காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு காவல்துறையினர், அனுமதி வழங்க முடியாது உடனே மன்னார்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி விக்னேஷ் உடல் இருந்த ஊர்தியில் ஏறி மூன்று காவல்துறை அதிகாரிகள் அமர்ந்தனர். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனும் காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீமான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள கட்சிப் பணிமனையில் விக்னேஷ் உடல் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.