வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சிங்களத் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்ற வகையில், அந்தப் பாரம்பரியமான வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப்பின் ஞாபகார்த்த மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே இரா சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அஷ்ரப்பின் அரசியல் படிகள் மறைந்த தலைவர் தந்தை செல்வநாயகத்தையே பின்பற்றி இருந்தது எனவும், தந்தை செல்வாவினுடைய அரசியல் கொள்கைகளை அஷ்ரப் முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை செல்வாவினுடைய காலத்தில் வடக்கு கிழக்கில் வாழகின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் உரிமைகளை பற்றியே பேசிச் செயற்பட்டார் எனவும், அந்த நிலைப்பாட்டை அஷ்ரப்பும் முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விபரித்துள்ளார்.
அதேவேளை தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்தத் தீர்வில் முஸ்லிம் மக்களும் சமபங்காளிகளாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அவர் செயற்பட்டதாகவும இரா சம்பந்தன் கூறியுள்ளார்.
இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் மிகவும் இக்கட்டானதும், அதிமுக்கியமானதும் ,அதே நேரத்தில் அதிக சந்தர்ப்பமுள்ளதுமான ஒரு தருணத்தில் நாங்கள் தற்பொழுது இருப்பதாகவும், நாட்டின் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, எல்லோரும் சமமாக வாழக்கூடிய வகையில் நாட்டுக்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய ஓர் அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவதற்கு தற்பொழுது ஒரு சந்தர்ப்பம் உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் அதற்கென ஓர் அரசியல் வரலாறு இருக்கின்றது என்பதை எவராலும் மறுதலிக்க இயலாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது உரிமைகளைப் பெறுவதற்காக தமிழ்மக்கள் பாரிய தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள் எனவும், அரசியல் போராட்டங்களைத் தமிழ் மக்கள் முன்னின்று பல தசாப்தங்களாக, பல வடிவங்களில் நடாத்தியிருக்கிறார்கள் என்பதுடன், தமிழ்மக்கள் பாரிய அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ள இரா சம்பந்தன், தமிழ் மக்களுக்கான அடிப்படை உண்மைகளைக் கபடமான செயற்பாடுகளினூடாக இல்லாமல் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக ஏற்படுகின்ற தீர்வு மக்களுடைய அடிப்படை உரிமைகள், போராட்டங்கள், மக்களுடைய இழப்புக்கள் மற்றும் அழிவுகளை ஈடுசெய்யும் வகையில் அமைய வேண்டும் எனவும், குறிப்பாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்மக்கள் செய்த தியாகங்கள், அனுபவித்த இழப்புக்கள், அழிவுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியதாக அந்தத் தீர்வு அமைய வேண்டும் எனவும் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.