மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரை நீக்கமும் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுளளார்.
மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதுடன், காயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவே காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இதில் பழிவாங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் சனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமே நாட்டில் அதிகாரங்களைப் பகிர்ந்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகக் கூறிய முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை என்றும், தற்போதுள்ள இந்த அரசாங்கம் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டியிருப்பதாகவும் அவர் விபரித்துள்ளார்.
தேர்தல் மறுசீரமைப்பு விடயத்தில் 80வீதமான முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகவும்,
இதேபோன்று நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாகவும் தாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வாக்கெடுப்பு பொதுசன வாக்கெடுப்பாக அமையும் என்றும், 9 மாகாணங்களுக்கும் செனற்சபை ஒன்றும் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் பகிரப்பட்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்தினால் அவை மீள பெறப்படும் என்ற அச்சமும் உள்ளது என்பதனால், அவை தொடர்பாகவும் நாங்கள் சரியான முறையில் பேசியிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.