போரினால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
யாழ் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அவர், இவ்வாறான துன்புறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும், போரினால் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்லும் சட்ட ஒழுங்கு அமைச்சுக்கு கீழ் உள்ள புலனாய்வுப் பிரிவினர், இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் விபரித்துள்ளார்.
குறிப்பாக கணவனை இழந்த பெண்கள் திட்டமிட்டு புலனாய்வு என்ற ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும், விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியான கலையழகனின் மனைவி அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி என்று கூறப்படும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் தொடருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதன், இந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் எடுத்து வடபகுதி பெண்களின் நிம்மதியான வாழ்விற்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.