ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விளாடிமிர் புட்டினின் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது.
ரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றக் கீழ்சபைக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் நேற்று செப்ரெம்பர் 18ஆம் நாள் நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகி சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், அதிபர் விளாடிமிர் புட்டின் சார்ந்திருக்கும் ஐக்கிய ரஷியா கட்சி 53 சதவீதம் வாக்குகளை பெற்று மொத்தம் உள்ள 450 தொகுதிகளில் 300 இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டின் வலதுசாரி இயக்கமான எல்.டி.பி.ஆர். 14.3 சதவீதம் வாக்குகளையும், ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி 14.2 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளன.
மீதமுள்ள வாக்கு எண்ணிக்கையிலும் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி பெரும்பான்மையான வெற்றியை பெறும் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கையில் தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றிமுகத்தில் இருப்பது தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நிலையில், மாஸ்கோவில் உள்ள ஐக்கிய ரஷியா கட்சி அலுவலகத்துக்கு சென்ற விளாடிமிர் புட்டின் மற்றும் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோர் இந்த வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்று விரும்பிய மக்கள் தங்கள் கட்சிக்கு இந்த வெற்றியை பரிசாக அளித்துள்ளதாக தொண்டர்களிடையே பேசிய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஆனால் இம்முறை நடைபெற்றுள்ள தேர்தலில் குறைவான எண்ணிக்கையானவர்களே வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், நேற்றைய நாள் நடைபெற்ற வாக்களிப்பில் 47.5 சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.