வடக்கின் அபிவிருத்தி , மற்றும் முதலீடுகள் தொடர்பில் ஓர் முத்தரப்புக் குழுவை அமைத்து செயல்படுவது தொடர்பில் பிரதமர் மற்றும் கூட்டமைப்பினருடனான நேற்றைய சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மாவட்டச் செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அதன் நிறைவில் கூட்டமைப்பினர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்ட சந்திப்பில் பங்கேற்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் மற்றும் முதலீடுகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எட்டும் வகையில் ஓர் குழுவினை அமைப்பது எனவும், இதில் மூன்று தரப்பின் சார்பிலும் தலா இருவர் வீதம் ஆறு பேர் கொண்ட குழு அமைப்பதாகவும் இந்த கலந்துரையாடலின் போது இணக்கம் கானப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பிலும், அதேபோன்று வட மாகாண சபை சார்பிலும் தலா இருவர் நியமிக்கப்படும் அதே வேளையில், மத்திய அரசின் சார்பிலும் இருவர் நியமிக்கப்படுவார்கள் எனவும், இவ்வாறு நியமிக்கப்படும் குழுவின் மூலம் சிபார்சு செய்யப்படும் திட்டங்கள் மற்றும் முதலீடுகளை எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த யோசணை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமும் தெரிவித்து, முதலமைச்சரும் இனங்கும் பட்சத்தில் குறித்த நடைமுறையினை பின்பற்றலாம் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பினில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் செயலாளர் பாஸ்கரலிங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மாவை. சேனாதிராஜாவுடன் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.