1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 20ம் திகதி இது திலீபனுடன் 6ம் நாள் இன்று காலையிலிருந்து நல்லூர் கந்தசாமி கோவிலில் திலீபனின் பெயரில் நூற்றுக்கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணம் இருந்தன பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத்தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். இறைவா திலீபனைக் காப்பாற்றிவிடு கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள் இதை நான் அவதானித்தனான்.
பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே அதுவும் தமிழ்க்கடவுளாகிய குமரன் சந்நிதியிலே இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது. ஒரு நல்லமுடிவு கிடைக்க வேண்டும் இல்லையேல் உலகிலே நீதி செத்துவிடும் எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன். மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளாவேளைக்கு உணவு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான் அவர் சுயமாக எப்போதாவது மினுக்காத மடிப்புக்கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்க்கவில்லை அவரிடம் இருப்பதெல்லாம் ஒரே ஒரு நீளக்காற்சட்டை ஒரே ஒரு சேட்தான் .
அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பலபிரச்சனைகளை தீர்த்து விட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு பன்னிரண்டு ஒருமணிக்கு தலைமையலுவலகத்திற்கு வருவார் அந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளை களைந்து தோய்த்துக் காயப்போட்டுவிட்டே படு்க்க செல்வார். பின்பு அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்துவிடும்.இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடிவதங்கி தமிழினத்திற்காக தன்னையே அழித்து கொண்டிருக்கிறானே? எத்தனையோ பேரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்த இவரின் பிரச்சனையை தமிழினத்தின் பிரச்சனையை யார் தீர்க்கப் போகிறார்.
சீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ! கோலமிறு தமிழ்நாடினை கொள்ளையர் விரித்த வலையில் வீழ்ந்து அழிவதோ காலன் என்னும் கொடும் கயவனின் கையினால் கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ நாடு பெறும் வரை நம்மினம் தூங்குமோ ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப்பாராட்டியதையும் எண்ணிப்பார்க்கிறேன்.
வாராவாரம் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளியிட வேண்டும் என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒரு பிரதி ராஜனிடமும் மறுபிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன். தலைவர் பிரபாகரன் முன்னுரை எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்கு சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாக தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
தலைவர் பிரபா ஒரு இலக்கிய ரசிகன் என்பது பலருக்கு தெரியாது. இன்று முழுவதும சிறுநீர் கழிக்கமுடியாமல் கஸ்டப்படத்தொடங்கி விட்டார்.இன்னும் ஓரிரு நாட்களுக்கு என்ன நடக்குமோ என்ற எண்ணம் என்னை வாட்டிக்கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிக்கூடி திலீபனின் நிலைகண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இது எதுவும் தெரியாமல் திலீபன் தூங்கிக்கொண்டிருந்தான்.