ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளன.
நேற்று திங்கட்கிழமை குருநகர் டேவிட் வீதியில் உள்ள கலைக்கோட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது தொடாபில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னைய சூழ்நிலைகளும் நம்பிக்கையூட்டக்கூடிய அளவுக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை என்பதும், இவற்றிற்கு மாறாக தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் கோரிக்கைகள் அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவக்குரிய சூழ்ச்சியே தொடர்ந்து கொண்டிருக்ப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் தாயகமானது சிங்கள பெளத்த மயமாக்கலுக்குட்பட்டு பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், நாங்கள் பெளத்தர்களையும் சிங்கள சகோதரர்களையும் வெறுக்கும் மதவாதிகளோ அல்லது இனவாதிகளோ அல்ல என்ற போதிலும், எமது இனத்துக்கான அடையாளங்களை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தினை வழங்காது, அடக்கு முறையின் அடையாளமாக சிங்கள பெளத்த மேலாதிக்கத்தினைத் திணிக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என்றும் விளக்கமளித்துள்ளனர்.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று தனித்துவத்தை அழிக்கும் வேலைத் திட்டத்தினை செய்யும் இராணுவம் எமது மண்ணிலிருந்து முதலில் அகற்றப்படவேண்டும் என்றும், கடந்த 30 ஆண்டு காலமாக சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இறுதி போரிற்குப் முன்னரும் பின்னரும் கடத்தப்பட்ட, சரணடைந்த பின்னும் காணாமற்போன ஒவ்வொருவரின் நிலைமை தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும் என்றும், இன அழிப்புத் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணை வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனா.
இவையெல்லாம் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமிழர் தேசம், அதன் தனித்துவம், இறைமை, சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி தீர்வுத்திட்டம் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவை போன்ற கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு இதில் ஒட்டுமொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போதைய சூழலில் ஒன்றிணைந்த மக்கள் எழுச்சி ஒன்றே தமிழ் மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கும் என்பதை அறிவு பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும், எழுக தமிழ் பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.