தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் ‘எழுக தமிழ்’ பேரணியில் அனைவரும் இணைந்துகொண்டு தமிழ் ம்க்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு குரல் கொடுக்க வருமாறு பல்வேறு தரப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 24 ஆம் நாள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, எமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துலக சமூகமாக இருந்தால் என்ன, வளர்ச்சியடைந்த நாடுகளாக இருந்தால் என்ன, அவை அனைத்தும் தனது நலன்களை முதன்மைப்படுத்தி நாடுகளுக்கிடையிலான உறவுகளையே பேணும் என்றும், அந்த வகையில் அவை அரசாங்கத்துடன் மட்டுமே இணைந்து செயற்படும் என்பதையும் அவர் விபரித்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்போது மட்டுமே அவற்றின் மீதும் அனைத்துலக சமூகமும், வளர்ச்சியடைந்த நாடுகளும் கரிசனை செலுத்தும் எனவும் குறிப்பிட்ட அவர், 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் கூட்டணிக்கு அளித்த வலிமைமிக்க ஆணைதான், முதன் முதலில் அனைத்துலக சமூகம் எம்மீது கவனத்தைச் செலுத்துவதற்கு வழிவகுத்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்டு குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களதும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அமைப்பினர், தர்மத்தை நிலைநாட்ட விரும்புவோர், உண்மையான சனநாயகத்தை விரும்புவோர், தமிழ் தேசிய இனத்தின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பும் அனைத்து முற்போக்கு சக்திகள் ஆகியோரின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்பேசும் மக்களின் பொது அமைப்புகள், வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர், இளைஞர் மன்றங்கள், பெண்கள் அமைப்புகள், அரச மற்றும் அரசசார்பற்ற ஊழியர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இவை எதிலும் பங்குபற்றாத பொதுமக்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் இந்த பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.