தமது வழக்குகள் அனைத்தையும் வடமாகாண எல்லைக்குள் மாற்றுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அனுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்க்பபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளே இந்த கடித்தை பிரதமர் ஊடாக சனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்த்தின் ஊடாக கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் தொடக்கம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தமது அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் காலத்துக்கு காலம் தங்களின் விடுதலையை வலுவேற்றி உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்த போதிலெல்லாம், பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி தங்களின் போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், இன்று வரை தமக்கான நீதியும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது வழக்கு விசாரணைகள் சிறப்பு நீதிமன்றங்களின் ஊடாக விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்ட போதிலும், குறைந்தபட்சமாக அவற்றின் ஊடாகக்கூட தமக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குமாரபுரம் மக்கள் படுகொலை தொடர்பில் 8 இராணுவத்திற்கு எதிராக 150ற்கும் மேற்பட்ட சாட்ச்சியாளர்களுடன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது, அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 1 மாதத்திற்குள் அவர்களின் விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்படிருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2 தமிழர்களுக்கு எதிராக தொடரப்படிருந்த வழக்கானது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படாது தொடர்ந்தும் திகதியிடப்பட்டே வருகின்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான பல விடயங்களின் ஊடாக தமிழர்களாகிய தமக்கு எதிராக அனுராதபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை நீதியான முறையில் மேற்கொள்ளாது, தொடர்ந்தும் காலம் கடத்தப்படுவது தெளிவாவதுடன், விசாரணைகளின் போது மொழி ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை தாம் சந்திப்பதுடன் தமக்கு நீதி கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தம்மீது தொடரப்படிருக்கும் வழக்குகள் அனைத்தையும் யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மேல் நீதிமன்றங்களுக்கு மாற்றி, தமது தாய்மொழியில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்தி தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக நீதி அமைச்சின் கவனத்திற்கு இதனைத் தாம் கொண்டு வந்திருந்த போதிலும், இன்று வரை தமக்கான சாதகமான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சனாதிபதியும், பிரதமரும் தமது பரிதாப நிலையையும் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து, தமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அந்த கடிதத்தின் பிரதிகளை எதிர்கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.