“எழுக தமிழ்’ நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காலத்தின் கட்டாயமானது மக்கள் மைய விடுதலைப் போராட்டத்தை வேண்டி நிற்பதாகவும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வை நாமாகவேதான் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், தெளிவான அரசியல் நோக்கோடு எதிர் நோக்குப் பார்வையும், மக்கள் மையப்படுத்தப்பட்ட அணுகு முறையும் வரலாற்று ரீதியான கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் அது விபரித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு நகல் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பொதுசன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மக்களின் ஆணை பெறப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளதையும் தமிழ் சிவில் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரைகுறை தீர்வொன்று தமிழ் மக்களின் மீது திணிக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை உருவாக்கிவிட்டு, அரசியல் தீர்வு தமிழ் மக்களிற்கு கொடுத்தாகிவிட்டது என்று தெரிவிக்கும் நிலைமை ஏற்படும் எனவும் அது விளக்கமளித்துள்ளது.
பொறுப்புக்கூறலும் போர் குற்ற விசாரணையும் தேவையில்லை எனக்கூறி இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை முடக்கிவிடலாம் என்றும் சந்தேக வெளியிட்டுள்ள தமிழ் சிவில் சமூக அமையம், இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
குற்றவாளிகளை பாதுகாத்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் இன்னும் விரும்புகின்றது என்றும், தமிழ் மக்கள் எதிர்பார்த்ததிற்கு நேர்மாறான உள்ளூர்ப்பொறிமுறையை முன்னெடுப்பதுடன், அனைத்துலக விசாரணையோ கலப்பு பொறிமுறையோ போர்க்குற்ற விசாரணை தொடர்பில் நடைபெறும் சாத்தியம் இல்லாத தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்றது என்றும் அது விபரித்துள்ளது.
அரசியல் கைதிகள் தொடர்பிலோ அன்றி காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணிவிடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், இராணுவமய நீக்கம் தொடர்பிலோ அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்றும் அது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் அனைவரும் மீண்டும் எமது கோரிக்கைகளை கூட்டாக வலியுறுத்தி, மக்கள் மைய போராட்டத்தை முன்னிறுத்த வேண்டியது அவசியமாகின்றது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், வரலாற்றுத் தேவையை உணர்ந்து, அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வது மிகவும் அவசியமாகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ள தமிழ் சிவில் சமூக அமையம், ‘எழுக தமிழ்’ நிகழ்வில் தமிழ் மக்கள் இணைந்துகொண்டு அனைவரினதும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தள்ளது.