இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்க கடன்கள் வேகமாக அதிகரித்தல், பாரிய நிதிப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு நாணய வீழ்ச்சி ஆகியவைகள் இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளதனை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்வரும் ஆண்டு செலுத்த வேண்டிய 4.5 பில்லியன் டொலர் மற்றும் அதற்கு அடுத்த ஆண்டு செலுத்த வேண்டிய 4 பில்லியன் டொலரை செலுத்த அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுங்கம் மற்றும் வருமான வரி துறை திணைக்கள ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட நேரத்திற்கு வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக, வருவாய் சேகரிப்பு நடவடிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையினால், திறைசேரிக்கு பண சுழற்சி முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமையின் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பண சுழற்சி குழு மற்றும் நிதி அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.