தியாக தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் தாயத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இன்று நினைவுகூறப்பட்டுள்ளது.
இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய வளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நீர்கூட அருந்தாது அவரது உறுதியான போராட்டம் பதினோரு நாட்கள் தொடர்ந்திருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் அந்த தியாக தீபம் சாவை அணைத்துக்கொண்டது.
தமிழ் மக்களின் விடியலுக்காக திலீபன் தன்னுயிரை ஆகுதியாக்கி இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தாயகம், தமிழகம், புலம்பேயர் தேசங்கள் என தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் அவரை நினைவு கூர்ந்து இன்று நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் மக்கள் ஒவ்வெடிருவரும் தனித்தனியாக வீடுகளிலும், கூட்டமாக ஆலயங்கள், அலுவலகங்கள் என பொது இடங்களிலும் இந்த நினைவு கூரல் நிகழ்வுகளை இன்று முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட மாணவருமான தியாகத் தீபம் திலீபனை நினைவுகூர்ந்து, யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று காலையிலேயே வணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அங்கு வைக்கப்பட்ட திலீபனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய இந்த நிகழ்வுகளில் முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்த நல்லூரில் அமைக்கப்பட்ட நினைவுக் கோபுரத்தின் முன்பாகவும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு இன்றைய நாள் முழுவதும் அவரை நினைவு கூர்ந்து பல்வேற தரப்பினரும் சென்று மலர் தூவி விளக்கேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இன்று காலையில் அங்கு சனநாயக போராளிகள் கட்சியினர் நினைவுகூரல் நிகழ்வொன்ளை ஏற்பாடு செய்திருந்ததுடன், அங்கு சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வட மாகாண அவைத் தலைவர் சிவஞானம் என பலர் நினைவுத் தூபியில் தங்களின் அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம்,கஜதீபன் உள்ளிட்டவர்கள் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் கந்தர்மடத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களது தியாகத்தினை நினைவு கூரும் முகமாக இரத்தான நிகழ்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறே மன்னாரிலும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் சிவகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நினைவுகூரல் நிகழ்வில் அருட்தந்தை ஜெகதாஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினார் குமரோஸ், மன்னார் சமாதாக அமைப்பின் தலைவர் அந்தோனி மார்க், சமூக சேவையாளர் சிந்தாத்துறை, பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களின் பல்வேறு இடங்களிலும் தியாக தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.