பேர்ளிங்டன் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களில் நேற்று இரவு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பில் அந்தந்த பிராந்திய காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பேர்ளிங்டனின் North Shore Boulevard பகுதியில் அமைந்துள்ள ஜோசெஃப் பிரான்ட்(oseph Brant) மருத்துவமனைக்கு அனோமதேச நபர் ஒருவரால் நேற்று இரவு 9.30 அளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், தீவிர தேடுதல்களை மேற்கொண்ட போதிலம், அங்கு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதேமாதிரியான வெடிகுண்டு மிரட்டல்கள் ஹமில்ட்டனின் மோஹ்வோக் (Mohawk) கல்லூரி மற்றும் மக்மாஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் நேற்று இரவு விடுக்கப்பட்டுள்ளன.
மோஹ்வோக் கல்லூரி வளாகத்தில் இருந்தோர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டு, தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கும் ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதுபோல மக்மாஸ்டர் பல்கலைக்கத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், அங்கும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த அச்சுறுத்தல்கள் நம்பகரமானவை அல்ல என்ற நிலைப்பாட்டினை காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மூலகாரமான நபர் தொடர்பிலான விசாரணைகளை காவல்த்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், குறித்த அந்த இரண்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையில் செயற்பாடுகள் இன்று இயல்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான வெடிகுண்டு மிரட்டல்கள் அண்மைய நாட்களில் நாட்டின் நோவா ஸ்கொட்ஷியா, பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இவை குறித்து மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு விசாரணை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.