எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் இனவாதியாகவோ, சிங்கள எதிர்ப்பாளனாகவோ செயற்பட்டது இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைப்பதாலேயே தான் இனவாதியாக சித்தரிக்கப்படுவதாகவும், எனினும் இது நாள் வரை தான் இனவாதியாக செயற்பட்டது இல்லை என்றும் அவர் விபரித்துள்ளார்.
‘எழுக தமிழ்’ நிகழ்வானது மிகவும் அமைதியான பேரணி என்றும், குறித்த பேரணியின் ஆரம்பத்தின் போதே ‘சிங்களத்திற்கோ, பௌத்தத்திற்கோ, அரசாங்கத்திற்கோ எதிர்ப்பு தெரிவித்து இந்த பேரணி முன்னெடுக்கப்படவில்லை என்பதை தாம் தெளிவுபடுத்தியிருந்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறைமையே என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தம்மிடம் கூறியதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் தனது பிள்ளைகள் இருவரும் திருமணம் முடித்திருப்பது சிங்கள இனத்தை சேர்ந்தவர்களையே என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.