இனப்பிரச்சனைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகவும், எனினும் வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே தமக்கு சவாலாக உள்ளதாகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் ‘பொங்கு தமிழ்’ நடத்தியே, அவர்களுக்கிருந்த நல்ல வாய்ப்பைத் தவற விட்டனர் என்றும், சில விடயங்களில் அவ்வப்போது விட்ட தவறுகள் தங்களுக்கு படிப்பினையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் சில விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும், வடக்கில் ‘எழுக தமிழ்’, கிழக்கில் ‘கிழக்கின் எழுச்சி’, தெற்கில் ‘சிங்-ஹலே’ என விதவிதமான இனவாத தீவர சக்திகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் வெவ்வேறு துருவங்களாக செயற்படுவதாக தென்பட்டாலும் ஒருவருக்கொருவர் உதவுகின்ற பாணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், இறுதியில் இவர்கள் எல்லோரும் எதிரியின் நண்பர்கள் என்ற அடிப்படையில் செயற்படுவதை தாங்கள் காண்பதாகவும் அவர் விபரித்துள்ளார்.
பக்குவமாகவும், சாணக்கியமாகவும் கையாளப்பட வேண்டிய விடயங்களைப் பகிரங்கமாக போட்டுடைத்துக் குழப்பிவிடுகின்ற நிலவரங்களை ஏற்படுத்தக்கூடாது என்றும், மிகவும் கவனமாக இந்த விடயங்களைக் கையாள வேண்டியுள்ளதாகவும், அவ்வாறு கையாண்டால், சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்றும் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும் அமைச்சரவையில் அங்கம் வகித்த போதிலும், தமிழ் பேசும் மக்களுக்கு சாதகமான எந்தவொரு முன்னெடுப்பினையும் மேற்கொண்டிராத ரவூப் ஹக்கீம், தற்போது நல்லாட்சி அரசிலும் இணைந்து அமைச்சுப் பதவியை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.