யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் உக்ரேன் காட்டுப் பகுதியில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு நாடொன்றில் அடைக்கலம் தேடிச் செல்லும் வழியில், உக்ரேன் காட்டுப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பெற்றுக்கொள்ள வசதியில்லாத நிலையில் மரணத்தை தழுவியுள்ளார்.
மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்வின் சுதர்சன், சுடர் ஒளி மற்றும் வீரகேசரி நாளிதழ்களில் ஊடகவியலாளராகப் பணியாற்றிதுடன். பின்னர், யாழ். தினக்குரல் நாளிதழில் இணைந்து கொண்ட அவர், கேலிச்சித்திரங்களை வரைந்து பிரபலமானமை குறிப்பிடத்தக்கது.
யாழ். தினக்குரலில் கணினியின் துணையுடன் நவீன உத்திகளைக் கையாண்டு அவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததன.
யாழ்ப்பாணத்தில் மிகவும் நெருக்கடியான காலங்களில் ஊடகப் பணியாற்றிய அஸ்வின் சுதர்சன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருதையும் வென்றமை சுட்டிக்காட்டத்தக்கது.