அரசியல் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நியூஸிலாந்து பிரதமருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து அவர்கள் கூட்டாக ஊடகவிலாளர்களை சந்தித்த போதே, போரிலிருந்து மீண்டு நாட்டை கட்டியெழுப்ப போராடிவரும் இலங்கை அரசாங்கத்திற்கு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பூரண ஆதரவை வழங்க தாம் தயாராகவிருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரு தலைமுறைக்கு நீடித்த போரினால் நாடு பேரிழப்புகளை சந்தித்திருந்த நிலையில், தற்போது போர் நிறைவுக்கு வந்து, நாட்டை மீள கட்டியெழுப்ப சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் போராடி வருகின்றது என்றும் விபரித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் இதுவரை பல மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட அவர், அவ்ற்றைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதிய அரசின் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அரசியல் ரீதியான ஆதரவை வழங்குவதுடன், இரண்டு நாடுகளிடையே வலுவான பொருளாதார உறவை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்