தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற, மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழாவில் தவிர்க்க முடியாத காரணத்தால் முதலமைச்சர் கலந்துகொள்ளாத போதிலும், அவரின் உரை வாசிக்கப்பட்டது.
இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டு காலங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல் முன்னெடுப்புக்களில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதும், அதன் விளைவாகத் தோல்விகளைத் தழுவிக் கொள்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருவதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, வெற்றிக்கான வழிவகைகளைத் தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்திய அவர், இரண்டாம் உலக போரின்போது அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி பேரழிவுற்ற ஜப்பான், அக்கணமே தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பட்ட சவால்களை எதிர் கொண்டு, சுமார் கால் நூற்றாண்டு காலப்பகுதியில் தன்னை இரண்டாவது உலகப் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் கொண்டதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
அவ்வாறே ஐரோப்பியர்களின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி பாரிய இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட யூத மக்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனக்கொலைகளின் சவால்களை எதிர் கொண்டு, ஐக்கியப்பட்டு, அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர் என்றும் அவர் விபரித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓரணியின் கீழ் ஐக்கியப்பட்டு தமது உரிமைக்காக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என்ற பேதங்கள் இன்றி, மொழியால் ஒன்றுபட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும் சில சிங்கள தலைவர்களும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தலைவர்களும் அவ்வப்போது சார்பான கருத்துக்களையும், ஒத்தியைவுகளையும் வெளிப்படுத்தி வந்த போதிலும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்கள் தமது கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைவர்களாக மாற்றம் பெற்றுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களை அடக்கியாள முயற்சித்து அது சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனைக் கண்டும் காணாதது மாதிரி நாம் இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதாரணத்திற்கு சட்ட வலுவற்ற தன்மையில் வடமாகாணத்தில் புத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றுதான் நாம் அண்மையில் கூறியிருந்த நிலையில், அதனைத் திரித்து வடமாகாணத்தில் புத்தவிகாரைகள் கட்டக்கூடாது எனவும், சிங்கள மக்கள் குடியிருக்கக் கூடாது என்றும், சிங்கள மக்களை வடமாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றெல்லாம் திரித்துக் கூறி, தன் மீதான பலத்த ஒரு வெறுப்பியக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளைக் கூறாது, அவர்கள் தருவதை ஏற்க வேண்டும் என்ற ஒரு எண்ணப்பாடே இன்று பெரும்பான்மை மக்கள் பலரிடம் இருந்து வருகின்றது என்றும், இதற்குள் அரசியலும் சேர்ந்து தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாது, அவற்றைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ, அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாம் தொடர்ந்தும் எம்மிடையே பகைமை உணர்வுகளையும் அரசியல் போட்டி பொறாமைகளையும், காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களாகவும் காலத்தை ஓட்டுவதையும் நிறுத்த வேண்டும் என்றும், கற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக தூய்மையான வரலாறு ஒன்றை தமிழ் மக்கள் இனியாவது படைக்க முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுவரை எத்தனை இடையூறுகள் வரினும் அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராகிக்கொள்ள வேண்டும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமது அந்த உரையில் தெரிவித்துள்ளார்.