நல்லாட்சி அரசாங்கம் இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், அனைத்தையும் இழந்து நிற்கும் சமூகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வினை இந்த ஆண்டுக்குள் வழங்க முன்வரவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், நாங்கள் அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் எனவும், நாங்கள் கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட, கல்வியால் வளர்ந்த சமூகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்த காலத்திற்கு முன்பு இலங்கையில் எந்த மாவட்டத்தை எடுத்தாலும் அங்கு அனைத்து உயர் பதவிகளிலும் இருந்தவர்கள் தமிழர்கள் தான் என்ற வகையில், நாங்கள் கல்வியால் எழுந்த சமூகமாக இருந்த போதிலும், இன்று நாங்கள் அதனை இழந்திருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நாம் உரிமைக்காக இழக்கக்கூடிய அனைத்தையும் இழந்திருப்பதகாவும் தெரிவித்துள்ள அவர், அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இந்த சமூகம் இந்த தேசத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமானால், அதனை கல்வியால் மாத்திரமே சாத்தியமாக முடியும் எனவும், கல்வியால் மாத்திரமே தனித மனித வாழ்க்கையிலும், சமூகத்திலும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒரு அரசியலமைப்பு மாற்றம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், இதில் நாங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு, மூன்று தசாப்த காலமாக எமது மக்கள் இழந்த இழப்புகளுக்கான நிவாரணம் கிடைக்குமென்று நூறு சதவீதம் கூறமுடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதய நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதில் நாட்டின் சிறுபான்மையின மக்களுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதகாவும், இந்த அரசின் மூலமாக ஒரு சரியான தீர்வு கிடைக்குமென மக்கள் இன்றுவரை நம்பிக் கொண்டிருப்பதகாவும், ஆகையால் இந்த அரசோடு சில விடயங்களில் தாங்கள் ஒத்துப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிகப்பெரிய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலந்தனை, மாதவனை போன்ற பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலக்காணிகள் வேறு சமூகத்தினரால் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் இன்னும் சில விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்கள் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக எந்த இடத்தில் குடியிருந்தார்களோ இந்த இடத்தில் அவர்கள் குடியேறுவதற்கு தாங்கள் அனுமதிப்பதாகவும், தாங்கள் இனவாதமோ மதவாதமோ பிரிவினைவாதமோ பேசவில்லை என்புதுடன், தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்கள் எந்த இடத்திலுமே அத்து மீறி ஒரு இஞ்சி காணிகளை கூட பிடித்ததில்லை எனவும், எந்த வணக்க ஸ்தலத்தினையும் உடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு சில இனவாத தலைமைத்துவங்கள், குறிப்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் இலங்கையில் மீண்டும் இரத்த ஆற்றை ஓடவைப்பதற்கு, பொதுபலசேனா போன்ற பௌத்த அமைக்கள் ஊடாக குழப்ப நிலையை ஏற்படுத்தி, இனமுறுகலை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுபலசேனா பௌத்த பிக்கு ஒருவர் தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறியுள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ள வியாழேந்திரன், தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு போகவேண்டுமானால் வட நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த சிங்கள மக்கள்தான் முதலில் வடநாட்டுக்கு செல்லவேண்டும் எனுவம், தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.