கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 1–ந் தேதியில் இருந்து 6–ந் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (செப்டம்பர்) 30–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக்கட்சி கூட்டத்தின் போது ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடக்கூடாது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உறுப்பினரை நியமனம் செய்யக்கூடாது என்று அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூறினார்கள்.
பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தின் போது காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க மறுபடியும் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் கூடுகிறது.