போரினால் பாதிப்படைந்த கிழக்கு மாகாண மக்களில் அதிகமானோர் நிவாரணங்களைப் பெறமுடியாது, அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக வலிந்து இடம்பெயரச் செய்யப்பட்ட, போரின் கொடூரத்திலிருந்து தப்புவதற்காக இயல்பாக இடம்பெயர்ந்த கிழக்கு மாகாண மக்களுக்கு அதிகளவான வீடமைப்புத் திட்டம் தேவையாகவுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் தேவை அதிகமாக இருப்பினும், அதனை மத்திய அரசாங்கம் நிறைவேற்றாததைச் சுட்டிக்காட்ட முடியாமல் இருக்கமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மீள் குடியேற்றம் என்பது முழுமையாகவும் திருப்தியானதாகவும் அமையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகணத்திலுள்ள பல குடும்பங்கள் தமது சுய முயற்சியினாலேயே தமக்குரிய வீடுகளை அமைத்து வாழ்வதாகவும், கிழக்கு மாகாண மக்களுக்கு மத்திய அரசாங்கம் இதுவரை பாரிய ஒதுக்கீட்டுத் திட்டத்தை மேற்கொள்ளாதிருப்பது வருத்தமளிப்பதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மேலும் தெரிவித்துள்ளார்.