தேவையற்ற பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தவேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவின் இன்றைய இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு, சனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மத்தியில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
தன்னைப் பேயாகவும் பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும் சித்திரிப்பதற்கு முன்னர், தான் அண்மையிலே பேசிய பேச்சை சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ முறையாகச் சரிவர மொழிபெயர்த்து வாசித்து விட்டு, தன்னை விமர்சித்திருந்தால் அதற்கான பதிலைத்தந்திருக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தான் சொல்லாததை எல்லாம் சொல்லி, தன்னை வைவது மனவருத்தத்தைத் தருகின்றது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
1958ஆம் ஆண்டில் செனவிரத்ன எனப்படும் ஒரு சிங்களவரை வெட்டித் துண்டு துண்டாக்கி மீன் பெட்டிகளில் அடைத்து அனுப்பியதாக ஒரு கட்டுக் கதை கட்டி விடப்பட்டதால்த்தான், பல தமிழ்மக்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதுடன், சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன என்பதையும் அவர் தனது உரையில் நினைவூட்டியுள்ளார்.
ஆகவே பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தாது இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கியமாக தெற்கில் தேர்தலில் தோல்வியுற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர், தம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடாத்த முற்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
1955ம் ஆண்டு சிங்கள மொழியைப் படிக்க ஆவல் கொண்டு அதனைப் பயிலத் தொடங்கிய போதிலும், 1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்டதனை அடுத்து சிங்களம் படிப்பதை இடைநிறுத்திவிட்டதாகவும், வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரியத்தையும் மொழியையும் அரசாங்கம் புறக்கணித்தமை தன்னைக் கோபம் அடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இன்று மும்மொழித் தேர்ச்சி சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், விளையாட்டு வீர வீராங்கனைகள் ஆங்கில மொழித் தேர்ச்சிபெற்றால் ஒருவருக்கொருவர் சரளமாகப் பேசுவதுடன், உலக அரங்கில் பலவற்றினை அறிந்துகொள்வும் அது உதவும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது உரையின் போது முன்னதாக தமிழில் உரையாற்றிய முதலமைச்சர், பின்னர் சிங்கள மொழியிலும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.