வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்கள் அவருக்கு மட்டுமானது அல்ல எனவும், அவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணியினால் தென்னிலங்கை அரசியல் சமூகம் கலக்கமடைந்திருப்பதாக, ஆட்சியாளர்களும், சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளும் இனவாதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்ற நிலையில், இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவு விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே தமிழ்த் தேசிய இனத்தின் மீதான அடக்கு முறைகள் தொடங்கி விட்டதை வரலாற்றின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்பதையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து உருவாகிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பெயர்களிலிருந்தே இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளின் உதயத்தின் காரணமாகவே அகில இலங்கை தமிழ் காங்கிரசும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தோற்றம் பெற்றது என்பதும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும் என்ற வகையில், இனவாதம் முதன் முதலில் தென்னிலங்கையிலிருந்தே உருவானது என்பதையும், அதனை இன்றைய சனாதிபதியும் பிரதமரும் கூட ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி, அவற்றை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக இருவரும் கூறிவந்தனர் என்பதையும் அவர் சுடடிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட இருப்பதாக, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மைத்திரி ரணில் ஆகியோரின் தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட வேளையில் தெரிவிக்கப்பட்டது எனவும், இதனாலேயே மைத்திரி ரணில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிட்டியது என்றும் அவர் விபரித்துள்ளார்.
எனினும் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினையான அரசியல் தீர்வு ஒரு புறம் இருக்க, நாளாந்தப் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலை, இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்தல், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய புத்த விகாரைகளைக் கட்டுவதை நிறுத்துதல், வழிபட யாருமற்ற இடங்களில் புத்தர் சிலைகளை வைப்பதைத் தவிர்த்தல், அரச அனுசரணையுடன் வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்களைக் கைவிடுதல் போன்றவற்றைக கூட தற்போதய இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்படுகிறது என்பதை எடுத்து காட்டுகின்ற இந்த நிலையில், அரசியல் தீர்வு என்பது எவ்வாறு அமையப்போகிறது என்ற பலத்த சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்களைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசினதும், அனைத்துலக சமூகத்தினதும் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக, தமிழ் மக்கள் பேரவை விடுத்த வேண்டுகோளை ஏற்று, வடமாகாண முதலமைச்சரின் அறைகூவலுக்கு இணங்கவும் பேரவையில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் அழைப்பிற்கு இணங்கவும், தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் பெருமளவில் ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் பங்குபற்றிய எவரும் எந்தவொரு இனத்திற்கும் எதிராக முழக்கமிடவோ, கருத்துரைக்கவோ இல்லை எனவும், தமது உரிமைகளை வலியுறுத்தியும், தமது தேவைகளை முன்வைத்தும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டியுமே மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் முழக்கமிட்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ‘எழுக தமிழ்’ பேரணியை சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளுக்கும், சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பி, அதில் குளிர்காய நினைக்கும் அரசியல் சக்திகளுக்கும், பௌத்த மத அடிப்படை வாதிகளுக்கும் தமிழ் மக்களின் உரிமைக்குரல் எப்பொழுதும் போல இனவாதமாகத் தெரிவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் எந்தவொரு இனத்தையோ, மதத்தையோ, சமூகத்தையோ தாக்காமல், தமது உரிமைகளை மட்டுமே வலியுறுத்தி முழக்கமிட்டு அந்த முழக்கங்கள் சார்ந்த உரைகள் இடம்பெற்ற ஒரு பேரணிக்குத் தலைமை தாங்கிய வட மாகாண முதலமைச்சரைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது எந்தவகையில் நியாயமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.