வடக்குக்கு வருகை தரும் அமைச்சர்கள் வடக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்குறித்து தெற்கு மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான சலுகைக் கட்டணம் வழங்கும் தேசிய அங்குரார்ப்பண விழா நீர்வேலியில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், எமது மக்களின்விவசாய நிலங்கள் பல இன்னமும்ம் இராணுவத்தினர் வசமே உள்ள எனவும், இதனால் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சி மாற்றத்துடன் தாம் சில இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், எமக்குரிய அரசியல் தீர்வை இந்த அரசும் தராது விட்டால் தாம் என்னசெய்வோம் என்பதை ஐ.நா. செயலர் பான்கீ மூன் இலங்கை வந்தவேளை அவருக்குத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவம் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆகவே இந்த நல்லாட்சி அரசு எமக்குரிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் என்பதில் தமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எமது மக்களின் பெருமளவான விவசாய நிலங்கள் இன்றுவரை இராணுவம் வசமே உள்ளதனால், விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மக்கள் தமது நிலங்களை இழந்து துன்பப்பட்டு வருகின்றனர் எனவும், எனவே இந்த நிகழ்வுக்கு வருகைதந்திருக்கும் மின்சக்தி அமைச்சர், மின்சக்தி பிரதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர், எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை உணர்ந்து, இராணுவத்தின் வசமுள்ள எமது மக்களின் காணிகள் அனைத்தையும் விடுவிக்க உதவவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எமது பிள்ளைகள் இந்த நல்லாட்சி அரசுக்குக் கைலாகு கொடுத்து மாலைகள் அணிவித்து வரவேற்கிறார்கள் என்றால் அது அவர்களை மகிழ்விப்பதற்காக மட்டுமன்றி, எங்களை விடுதலையுடனும், மகிழ்வுடனும் இந்த நாட்டில் வாழவிடுங்கள் என்ற எதிர்பார்ப்பினை வெளிக்காட்டுவதற்காகவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது மக்களின் விடுதலைக்காகப் பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதுடன், எமது மக்களும் கடந்த காலப் போர் காரணமாக பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில், நாம் எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது எனவும், அதற்கு முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் என்ற போதிலும், எமக்கான சந்தைப்படுத்தல் வசதியின்மையால் இன்றுவரை எமது மக்கள் உரிய வருவாயைப் பெறமுடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் உள்ள பெரிய வியாபாரிகள் எமது விவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் மரக்கறிகளைப் பொலித்தீனில் சுற்றி ஃபூட்சிட்றி, கடைகள் வாயிலாக விற்பனை செய்வதாகவும், எமது விவசாயிகள் நவீன இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதனால் விவசாய நிலம் வளமிழப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.