அரசியலமைப்பினூடாக தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை தடுப்பதற்கான பேரினவாதத்தின் ஒத்திகையே, வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென்னிலங்கை இனவாதிகளால் வடமாகாண முதல்வருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட தமது அறிக்கை ஒன்றிலேயே வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பரிப்பவர்களின் முன்னெடுத்துவரும் இந்த நாடகம், புதிய அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்காமல் தடுப்பதற்கான பேரினவாதத்தின் ஆரம்ப ஒத்திகையே என அவர் விபரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரை புலிகளுக்கு எதிராகவோ, தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவோ வீதியில் இறங்கி போராடாத வவுனியா சிங்கள மக்கள், இன்று வீதிகளில் இறக்கிவிடப்பட்டிருப்பது இனவாதத்தின் உச்சநிலையை வெளிக்காட்டுகின்றது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பிலிருந்து மத அடிப்படைவாதிகளும், இனவாதிகளும் வடக்கின் வாசலுக்கு வந்து, இவ்வாறு தமிழ் சிங்கள மக்களின் உறவை சீர்குலைக்கவும், அப்பாவி சிங்கள மக்களை பலிக்கடாவாக்கும் முயற்சிகளுக்கும் அரசாங்கம் துணை போய்விடக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பேரினவாதிகள் என உலகில் முத்திரை பொறிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்குள் இருந்தும் பசுத்தோல் போர்த்திக்கொண்ட பேரினவாத சிங்கங்கள் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக கர்ச்சிக்க தொடங்கிவிட்டன என்றும் அவர் விபரித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தேசிய அரசாங்கத்தின் உண்மை முகங்களை காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ள அவா, இனவாத நிகழ்ச்சி நிரலில் இணைந்து கொள்ள திரை மறைவில் திட்டம் தீட்டும் தேசிய அரசாங்கத்தின் பொய் முகங்கள், வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, ஞானசார தேரர் போன்ற இனவாதிகளையும், மதவாதிகளையும், சிறைக்குள் வைத்து பூட்டாதவரை, தேசிய அரசாங்கத்தால் எதையும் சாதிக்கவும் முடியாது என்றும், தமிழ் மக்களுக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வை பெற்றுத்தரவும் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இவர்களின் இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தவறினால் மைத்திரி, ரணில் கூட்டணியினரும் வீட்டுக்கு செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் வட மாகாண சபை உறுப்ப்பினர் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.