இலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை எனவும், அதனாலேயே தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாதுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதனுக்கு இன்று தனது இறுதி வணகத்தினைச் செலுத்திய சம்பந்தனிடம், முல்லைத்தீவு உட்பட வன்னி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இந்தத் தகவல்களை முன்வைத்துள்ளார்.
இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழா இறுதி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய இரா சம்பந்தன், பிளவுபடாத நாட்டுக்குள் அனைத்து மக்களும் உள்ளடங்கப்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புக்களையும், முயற்சிகளையும் தாங்கள் இலங்கை அரசுக்கு வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டுக்கள் மூலம் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டு, ஒற்றுமை வளர்க்கப்படவேண்டும் எனவும், ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களாக அனைவரும் வாழவேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை சுதந்திரமடையும் போது, பெருன்பான்மையினம் மாத்திரம் சுதந்திரமடைந்த போதிலும், சிறுபான்மையினம் சுதந்திரமடையவில்லை எனவும், சகல மக்கள் மற்றும் கட்சிகளை உள்ளடக்கிய வகையில், அரசியல் சாசனம் உருவாக்கப்படாமையே அதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தனிப்பட்ட கட்சிகளால், ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறாமல் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டமையால்தான், நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமைப்படுத்தவில்லை எனவும், தற்போது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில், அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட்டு, இறைமைகள் மதிக்கப்பட்டு, இறைமையின் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும் எனவும், அவ்வாறே இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என்று நம்புவதாகவும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.