காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. நாங்கள் தெரிந்து கொண்ட வகையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எந்த பிரமாண பத்திரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
தற்போதைய நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்றுதான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாரியத்தை உடனடியாக அமைப்பதில் நிர்வாகச் சிக்கல் இருப்பதாலும், இது குறித்து ஒரு தெளிவற்ற நிலை இருப்பதாலும் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்திருக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தை மதிக்காத கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் எப்படி மதிக்கும் என்பது அனைவரின் கேள்விக்குறியாக உள்ளது. வாரியத்தை அமைப்பதற்கான பணிகளை மத்திய நீர்வள அமைச்சகம் தொடங்கிய நிலையில் அதற்கு கர்நாடக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே, இப்பிரச்சினையில் மத்திய அரசை குறை கூறுவது சரியான நிலைப்பாடு இல்லை.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் தமிழக பாஜக சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.