தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சட்டத்தரணிகள் அதனை விரும்பாமையினாலேயே நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்த விதமான ஆட்சேபனையும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தாம் முயற்சித்தபோதும், அரசியல் கைதிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளே அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அவ்வாறு சட்டத்தரணிகளால் கோரிக்கை விடுவிக்கப்படாமல் இருந்திருந்தால் மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தனது பதவிக்காலத்திலோ, பதவியை இழந்ததன் பின்னரான காலத்திலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவி்துள்ள மகிந்த ராஜபக்ச, தம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.