இலங்கையில் நடப்பில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளமையானது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் முப்படைத் தளபதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புத்துறை நிபுணர்களுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலோசனைகள் பெறப்படவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முப்படைத் தளபதிகளுடன் இது தொடர்பில் விரைவில் பேச்சு நடாத்தவுள்ளனர் என்றும், இதற்காக சிறப்பு பாதுகாப்புச் சபைக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இன்றைய நாடாளுமன்ற ஒன்றுகூடலின் போது கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளமையானது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் , பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை விடவும் ஆபத்தானதாக அமையலாம் என்று அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.