இந்தியாவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று முற்பகலளவில் புதுடெல்லியை சென்றடைந்துள்ளனர்.
புதுடெல்லி விமான நிலையத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்ஹா இலங்கைப் பிரதமருக்கு வரவேற்பு அளித்திருந்தார்.
இதேவேளை நாளை புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைப் பிரதமருக்கும் இடையில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறவுள்ள நாளைய பேச்சுக்களின் போது, இருதரப்பு உறவுகள், பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக, நாளை காலை 11.30 மணிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைப் பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடாத்தவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற்பகலி்ல், வீதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை மாலைப் பொழுதில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேசவுள்ளார்.
பின்னர் வியாழக்கிழமையன்று நடைபெறும் இந்திய பொருளாதார உச்சிமாநாட்டில், இந்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமானுடன், ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவருடன் சேர்ந்து இலங்கைப் பிரதிநிதிகள் குழுவும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கிறது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.