கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற சுயாதீனத்திற்கு ஆட்சியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தபோது பேசாமல் ஊமைகளாக இருந்தவர்கள் இன்று தம்மை வீரர்களாகக் காண்பிக்க நீதிமன்றங்களின் சுயாதீனம் தொடர்பில் பேசுவதாக ஊடகப் பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவிதன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஆட்சியாளர்களினால் நீதிமன்றங்களின் சுயாதீனத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் எதனையும் பேசாது இருந்தவர்கள் இன்று நீதிமன்றங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதாக பேசி தம்மை வீரர்களாக காண்பிக்க முற்படுகின்றனர் என்றும் அவர் விபரித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க சட்டத்திற்கு முரணாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது அதனையிட்டு பலர் பால்சோறு உண்டு மகிழ்ந்திருந்தனர் என்றும், அப்போது இந்த நீதிமன்ற காவலர்கள் அமைதியாக இருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.